.

All About Keelapavoor

என் இனிய இயந்திரா - சுஜாதா - நூல் - 2

                  நாம் அறிவியலை எந்த அளவிற்கு அறிந்து வைத்திருக்கிறோம் என்று கேட்டால், பெரும்பாலானோர் என்ன பதில் தருவார்கள்?. இன்றைய காலம் நம்மை அடிப்படை அறிவியலிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. நவீன அறிவியலை நமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளாமல், நம்மை அடிமைப் படுத்தும் சாதனமாக உருமாற்றி கையிலும் மடியிலும் சுமந்துகொண்டு திரிகிறோம். ஆனால் நவீன அறிவியலை பயன்படுத்தி ஒரு நகரத்தை இப்படியும் வடிவமைக்க முடியும் என்பதை எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பெற்ற ஒரு அறிவியல் புனைவு நூலை இன்று அறிமுகம் செய்துகொள்வோம்.

“என் இனிய இயந்திரா” எனும் நூல் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் எழுதப்பட்டது, கணினித்துறை தன் கால்களை அகலப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது. மனிதனின் அத்தனை வேலைகளையும் ஒரு எந்திரம் செய்யத் தொடங்கினால்?.

சுஜாதா ஒரு அறிவியலாளர், எழுத்தாளர், திரைபடத்திற்கு வசனம் எழுதுபவர் என பன்முகம் கொண்டவர். திரைத்துறையில் இவரை அதிகமாக பயன்படுத்திக் கொண்டவர் இயக்குனர் சங்கர். என்ன எந்திரன் படம் நினைவில் வருகிறதா?. இந்த படத்திற்கும் நாவலுக்கும் நிச்சயம் அதிக தொடர்பு உண்டு.

நிலாவுக்கும் சிபிக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள அரசிடமிருந்து அனுமதி கடிதம் கிடைப்பதில் நாவல் தொடங்குகிறது. ரவி என்ற தனிமனிதன் அரசாங்கம் அனுமதியோடு வாடகைக்கு கிடைத்த அறைக்கு வருகிறான். இவனோடு ஒரு எந்திர நாயும் (ஜீனோ) உள்ளது. தமிழகத்தை ஜீவா எனும் சர்வாதிகாரி ஆட்சி செய்யும் நவீன காலகட்டம். இந்தியாவை யார் ஆட்சி செய்கிறார்கள் என்று குறுக்கு விசாரணை செய்யாமல் தொடர்ந்து வாசித்தால் தொழில்நுட்பத்தில் மிளிரப்போகும் அல்லது மிளிர வாய்ப்பற்றுப் போகும் சென்னையை பார்க்க முடியும். இந்த நகரில் மனிதர்களுக்கு பெயர்கள் கிடையாது ஆனால் எண் உண்டு. சொந்த வீடு கிடையாது, குப்பை அள்ளும், சாக்கடை அள்ளும் வேலையும் கிடையாது, அத்தனையும் எந்திரங்களால் செய்விக்கப்படுகிறது. சுரங்கத்தில் போகும் தொடர்வண்டியும் இருக்கிறது.

இந்த கதையின் நாயகன் ஜீனோ தான் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லாமல் கதை நகர்கிறது. ரவி வாசிக்கும் அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடும் ஜீனோ சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுவிடுகிறது.
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஒன்று செயல்படுகிறது, ஜீனோவின் துணையோடு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மக்கள் ஆட்சி நிறுவுவதுதான் கதையின் பின்புலம்.


கீழிருக்கும் இணைப்பை பயன்படுத்தி நாவலை (PDF) பதிவிறக்கம் செய்து வாசியுங்கள். மறக்காமல் கருத்து பதிவு செய்யுங்கள் உறவுகளே...

http://www.mce89.com/_ld/0/66_En_Iniya_Endhir.pdf

சுஜாதாவின் மேலும் பல நூல்களை இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://drive.google.com/folderview?id=0B42iwZpbSKqQfmlJZlJKb3pqbHdseDlkSkVnVlp6SUFvQWp2RXU3ZXNhR3IxSnRkc0IxZ1k&usp=sharing


Learn more »

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - நூல் - 1

திருக்குறளையும் பாரதியின் எழுத்துக்களையும், யாரெழுதியது என்ற நினைப்பேயில்லாமல் மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட பல புலமைகளை பற்றிய அறிமுகம் பள்ளியிலேயே கிடைத்ததும், சிலவற்றை மனப்பாடம் செய்திருப்போம். அந்த எழுத்துக்கள் எங்கேனும் மூளையின் நரம்பிடுக்குகளில் தூசிபடிந்து கிடந்தால் அதை சீர்படுத்த உதவும் எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்து பின் பழையன நோக்கிப் புகுதல் நலம் பயக்கும் எனக் கருதுகிறேன்.

வைரமுத்து அவர்களை தமிழகத்தில் அறியாதவர்கள் இருந்தால் அது குறிப்பிட்ட வயதுக்கு கீழுள்ள திரைப்படப் பாடல்கள் பற்றிய தெளிவான பிரக்ஞை இல்லாத சிறுவர்களாகத்தான் இருக்கும் மற்ற ஏனையரும் இவரை அறிவர். திரையுலகில் மட்டுமில்லாமல் இலக்கிய தளத்திலும் தனது தமிழ்த் திறனை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதை இவரது கிராமத்து நாவல் படைப்பு ஒன்று பெற்றிருக்கிறது. அதைப்பற்றி வரும் வாரங்களில் ஒருநாள் பேசலாம்.

இளைஞர்களின் நிலைகண்டு வருந்தி, அவர்களை தன் நண்பர்களாக பாவித்து சில கட்டுரைகளை “சிற்பியே உன்னை செதுக்குகிறேன்” என்ற சிறு நூலில் எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைகள் வெறும் அறிவுரை என்ற தளத்தில் நின்று கொள்ளாமல் நம்மோடு உரையாடுகிறது. பொழுதுபோக்கு என்ற சொல்லையே தமிழிலிருந்து அழித்தொழிக்க வேண்டுமென்றும், பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு என்று இயல்பான ஒரு தந்தைக்குறிய அல்லது நண்பனுக்குறிய நேசத்துடன் எடுத்துரைக்கிறது. திரைப்பாடல் எழுதுவது மக்களின் பொழுதுபோக்கிற்குத்தானே அதை முதலில் ஒழிக்கவேண்டாமா எனக் கேட்டால் நீங்கள் ஆக்கத்திற்கான தேடலுக்கு தயாராகிவிட்டீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்.

வாசிப்பு என்பது திரைப்படம் பார்த்துவிட்டு பிடித்திருக்கு பிடிக்கவில்லை என்ற நோக்கோடு விலகிச்செல்வது அல்ல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகம் அல்லது அறிவார்ந்த தேடலுக்கு விதையாக இருப்பது. இந்த புத்தகமும் வாசிக்கும் நம்மிடம் சில லட்சியக் கேள்விகளை எழுப்பும், பொழுதாக்கங்களுக்கான தேடல்களுக்கு இட்டுச் செல்லும், நம்மைப் பற்றிய தேடல்களை துரிதப்படுத்தும்.
இந்த கட்டுரைத்தொகுப்பின் இறுதியில் இவர் தன் மகனுக்கு எழுதிய சில கடிதங்களை இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ஓய்வு என்ற கட்டுரையின் பக்கங்களை இணைத்டிருக்கிறேன் வாசித்துப் பாருங்கள். வரும் வாரத்தில் சிறப்பானதொரு கதை புத்தகத்தை அறிமுகப் படுத்தலாம் என்றிருக்கிறேன். வாசிப்பவர்கள் தாங்கள் வாசித்த, வாசிக்கும் புத்தகத்தை பற்றி பின்னோட்டத்தில் எழுதலாம் விவாதிக்கலாம்.

அன்புடன்
ஜெ பாண்டியன்Learn more »

சிறந்த விஞ்ஞானி விருது கீழப்பாவூரைச் சேர்ந்த ஞானமிக்கேல்பிரகாசம்

கீழப்பாவூரைச் சேர்ந்த  லூர்துஅந்தோணி-செல்வபாக்கியம் தம்பதியினர்  இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மகன் ஞானமிக்கேல்பிரகாசம். இவர்  ஆர்.சி தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிபடிப்பை தமிழ்வழியிலும்,  பின்பு  பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்துள்ளார். தனது பி.யூ.சி படிப்பை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியிலும், பி.இ படிப்பை மதுரை தியாகராஜர் எஞ்சீனியரிங் கல்லூரியிலும், எம்.டெக் படிப்பை சென்னையில் உள்ள ஐ.ஐ.டி-யிலும் எம்.பி.ஏ படிப்பை அண்ணாமலை பல்கலை கழகத்திலும் படித்து முடித்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனதத்தில் (D.R.D.O)  எலக்ட்ரானிக்ஸ் ராடார் மேம்பாட்டு ஆராய்ச்சி ((L.R.D.E) ) அமைப்பில் மூத்தவிஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 1987-ல் விஞ்ஞானி-"பி"(B)யாக பணியை துவக்கிய இவர் இப்போது விஞ்ஞானி"ஜி"(G) நிலைக்கு உயர்ந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு மத்திய அரசால் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி(Scientist of the Year-2014)  என்ற விருதினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்பாரிக்கரிடம் இருந்து பெற்றுள்ளார் 

ஞானமிக்கேல்பிரகாசம் National Science Award- 2003. Agni Award for self Reliance- 2007   உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும். ராடார்ஆராய்ச்சித்துறையில் 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல் "SystemGenerator" என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கதாகும். இவரது மனைவி செல்வி பெங்களூரில் ஸ்டேட்பாங்ஆப் இந்தியாவிலும், மகன் ரூபஸ்மிக்கேல் ஆப்பிள் நிறுவனத்திலும், மற்றொறு மகன் அனூஸ் இன்டெல் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறன்றனர். தமிழ்வழியில் கல்வி கற்ற இந்த சாதனை தமிழனை பாரட்டுவோம்
Learn more »

வாசிப்போம் அறிமுகம் கொள்வோம்..

மனிதன் பிறக்கும் பொழுதே கற்கத் தொடங்கினாலும் கற்றலின் தொடர்தல் என்பது அவன் வாழும் சமூகம் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகிறது. பிற மனிதர்களிடம் பெறும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ள நம் சமூகம்  பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறது, அந்த அடிப்படைத்தகவல்களை பகுத்தறிய கல்வி என்பது கருவியாக இருந்து வருகிறது. கல்வி என்றவுடன் அது பள்ளியில் கற்றுத்தருவது மட்டுமல்ல, பள்ளிக்கல்வி என்பது வாய்வழியாக தொடர்பு கொண்டிருந்த நம்மை எழுத்துக்களை வாசிக்கவும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வடிவமைத்து புதிய தகவல் தொடர்புக்கு நம்மை தயார் செய்யும் ஒரு கூடம். இங்கே சுயகல்வி என்று ஒன்று உள்ளது, அதை நம்மில் எத்தனை பேர் தொடர்கிறோம் என்றால் அதன் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும் என எண்ணுகிறேன் எனது எண்ணம் தவறாகக் கூட இருக்கலாம்.

கீழப்பாவூரில் சமீபத்தில் நூலகம் ஒன்று திறந்திருப்பதாக அறிந்தேன் மகிழ்ச்சியாக உள்ளது, மகிழ்ச்சியை நீட்டிக்கும் விதமாக நமது ஊர் தோழர்களோடு உரையாட இந்த இணையத்தை களமாக பயன்படுத்தி சில புத்தகங்களை அறிமுகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன். உங்களில் பலரும் புத்தகம் வாசிப்பவராகவும் அதை நாம் ஒருவருக்கொருவர் அறியாமலும் இருக்கலாம். புத்தக வாசிப்பால் தன்னை உணர்வதோடு சமூகத்தையும் உணர்வோம் என்பது இதுவே.
தோழர்கள் தாங்கள் வாசிக்கும் புத்தகம் பற்றிய அறிமுகம் கொடுக்கவிரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது தளத்தின் ஒருங்கிணைப்பாளர் ஞானம் அல்லது எனது முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இப்போதைக்கு வாரம் ஒரு புத்தக அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறோம். உங்களின் ஈடுபாடும் ஆர்வமும் தினமும் ஒன்றை பிரசுரிக்கும் அளவுக்கு வெளிப்பட்டால் மிக்க நன்றியோடு அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறோம்.

இந்த வாரத்திற்கான புத்தக அறிமுகம் நாளை வெளியிடுகிறோம்.


வாசிப்பு வளமான அறிவார்ந்த சமூகத்தை உருவக்கும் என்பதில் ஐயமில்லை.

சி.ஞானசேகரன் : sasigsasi@gmail.com
ஜெ.பாண்டியராஜ்: rajjeba@gmail.com
Learn more »